இந்தியா

“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்

“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்

webteam

இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆம் தேதி, ஹஜிபூர் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே, அத்துமீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. 10 பயங்கரவாதிகளை இந்தியாவுக் குள் ஊடுருவ செய்வதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 வீரர்களின் உடல்களை, வெள்ளைக் கொடியை காட்டியபடி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் வீரர்கள், எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ நேற்று வெளியானது. 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “நாங்கள் ஒரு போதும் அணு ஆயுத போரில் ஈடுபட மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இரண்டு அணு ஆயுத நாடுகள் வழக்கமான போரில் ஈடுபட்டால், அந்த போர், பெரும்பாலும் அணு ஆயுத போரில் தான் முடியும். வழக்கமான போர் ஏற்படுவதில் இருந்து கடவுள் எங்களை தடுத்திருக்கிறார். இந்த போர், ஏற்பட்டால் பாகிஸ்தான் தோல்வி அடையும்.

போரில், ஒரு நாட்டிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்று சரண் அடைவது. மற்றொன்று, உங்களின் சுதந்திரத்திற்காக மரணம் வரை போரிடுவது. இதில், பாகிஸ்தான், இரண்டாவது வாய்ப்பிற்காக தான் போராடும். ஓரு அணுஆயுத சக்தி நாடு மரணம் வரை போரிட்டால், அதனால், பல பின் விளைவுகள் படு பயங்கரமாக இருக்கும். இதனால் தான் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையையும், அனைத்து சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடுகிறோம்” எனத் தெரிவித்தார்.