செய்தியாளர் - கார்த்திகேயன்
தற்போது உள்ள சூழலில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 465 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், படிப்படியாக பெரும் சரிவை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்க கடன் பத்திரங்களின் மீதான வட்டி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு, போர் போன்ற புவியியல் பதற்றங்கள் போன்ற காரணங்களால் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை குறைந்துக் கொண்டே இருக்கிறது.
இன்னும் 4 மாதங்களில், தங்கத்தின் விலை இன்னும் சரிவை சந்திக்கலாம் என்றும், சில நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால், நகையை வாங்க திட்டமிட்டுள்ள மக்கள், பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில், தங்கத்தை வங்கிகளில் அடமானம் வைத்துள்ள பொதுமக்களுக்கு, பெரும் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. அதாவது, பொதுவாக, தங்க நகைகளின் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கடன் வழங்கும்போது நகையின் எடை, தங்கத்தின் தரம், அன்றைய சந்தை விலை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்தால் கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு அடமானத்தின் மதிப்பு அதிகரிக்கும். ஆனால், விலை திடீரெனக் குறையும்போது அடமானமாக உள்ள நகையின் சந்தை மதிப்பும் குறைகிறது. இதனால் நிலுவையில் உள்ள கடன் தொகைக்கும், அடமான நகையின் தற்போதைய மதிப்புக்கும் இடையிலான விகிதம் மாறுகிறது. இதைச் சமாளிக்க சில கடன் நிறுவனங்கள் வாடிக்கையாளா்களிடம் கூடுதல் தொகை செலுத்துமாறு அல்லது கடன் தொகையைக் குறைக்குமாறு அறிவுறுத்துகின்றன.
கடன் ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் நிறுவனத்தின் கடன் கொள்கையைப் பொருத்து இத்தகைய நடவடிக்கைகள் மாறுபடுகின்றன. இந்த பிரச்சனையை சரி செய்வது தொடர்பாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்க், புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில், “அடமானம் வைத்த நகைகளை திருப்பிவிடுங்கள் என சில வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். கட்டாயமாக நகையை திருப்புவது என்பது அவசியம் கிடையாது. வங்கிகளின் விதிமுறைப்படி, நீங்கள் இன்றைய அளவில் எவ்வளவு பணம் வட்டியாக வந்திருக்கிறதோ, அதனை செலுத்திவிடுங்கள். பிறகு, யாரிடமாவது கடனை பெற்று, அந்த நகைக்கடனை அடைத்துவிடுங்கள்.
பிறகு, மீண்டும் நகைகளை வைத்து, கடனை பெற்றால், இந்த கூடுதல் நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. ஆனால், முன்பு கிடைத்த அளவுக்கான கடன் தற்போது கிடைக்காது. அதைவிட கொஞ்சம் குறைவாக தான் கிடைக்கும்” என்று தெரிவித்தார். எனவே, வாடிக்கையாளர்கள் இதுகுறித்து பெரிய கவலை கொள்ள தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.