கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் 26 அப்பாவி மக்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது இந்திய ராணுவம்.
இதனால், பாகிஸ்தான் இந்தியாவிற்கிடையே கடுமையாக சண்டை எழுந்துள்ளது. பாகிஸ்தான் உடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே வடக்கில் பாராமுல்லா தொடங்கி தெற்கே பூஞ்ச் வரை 26 இடங்களில் டிரோன்கள் காணப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் பஞ்சாபில் நடந்த பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் 3 பேர் காயமடைந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஃபெரோஸ்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர் சிங் சித்து ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஃபெரோஸ்பூர் பகுதியில் ஏவப்பட்ட பெரும்பாலான டிரோன்கள் இந்திய வான் பாதுகாப்பால் இடைமறிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் திட்டத்தின் ஆய்வு கூட்டத்தை சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) நடத்தியது. சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினரான இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியதுடன் வாக்கெடுப்பையும் புறக்கணித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கான 1 பில்லியன் டாலர் (850 கோடி ரூபாய்) கடன் உதவிக்கு ஐ.எம்.எஃப் ஒப்புதல் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது என ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
"பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் நிதி வழங்குவதற்கு ஐ.எம்.எஃப் ஒப்புதல் அளித்துள்ளதை அறிந்து திருப்தி அடைகிறேன்" என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு நிதியுதவியை தொடரும் முடிவு குறித்து ஐஎம்எஃப்பிடம் இந்தியா எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.