Summer heat
Summer heat  Unsplash
இந்தியா

நாளை முதல் வெப்ப அலைதாக்கம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Snehatara

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெப்பமான வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநிலங்களில் நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆய்வு மையத்தின் தகவலின்படி, வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்கம், சிக்கிம், ஒடிசா, கடலோர பகுதி ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் எனவும், மேலும், கோவா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

Heat wave

டெல்லியை பொறுத்தவரை வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிய நிலையில், அதிகபட்ச வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பகல்நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மேகமூட்டம் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை உயரக்கூடும். முன்னதாக வியாழன் அன்று அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட மூன்று புள்ளிகள் அதிகமாகும்.

வெப்ப அலை கணிப்புகளை அடுத்து, டெல்லி அரசு பள்ளி தயார்நிலை குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் குடிநீர் வசதி அமைத்து தருவதுடன், அரசு வழங்கவுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதி செய்யவும், பிற்பகலில் மைதானங்களில் கூடுவதைத் தவிர்க்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல ஒடிசாவில் அதிகரிக்கும் வெப்பநிலையைக் கருத்தில்கொண்டு ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை மூடுமாறு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டிருக்கிறார்.

Summer

மேலும் வெப்பம் அதிகரிக்கும் பல்வேறு மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுத்தும் பள்ளி குழந்தைகள் நலனை கருத்தில்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் வருவதாக சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் பல பகுதிகள் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட வெப்பமான வானிலையைக் காணும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வெப்ப அலைகளிலிருந்து விடுபடுவதற்கு ஏர் கன்டிஷனர்களை நாடுவதால், மின் நெட்வொர்க்கில் அதிக அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.