உத்தராகண்ட்  pt
இந்தியா

உத்தராகண்ட் |சக மாணவர் மீது தாக்குதல்.. கண்ணாடி பாட்டில்களால் தலையில் கொடூரமாக தாக்கிய 5 மாணவர்கள்!

சக மாணவர் ஒருவரை கண்ணாடி பாட்டில்களால் தாக்கியதாக ஐஐடி ரூர்க்கியைச் சேர்ந்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியிலுள்ள ஐஐடி-யில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி இரவு 11 மணியளவில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இங்கு ஜார்க்கண்டைச் சேர்ந்த 23 வயதான அஜித்குமார் கேஷ்ரி என்பவர் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். அஜித் குமாரை, அதே ஐஐடி-யில் படிக்கும் 5 பேர் சேர்ந்து கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளனர். முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதுதொடர்பாக அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் 5 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், “ என்னைக் கொல்லும் நோக்கத்துடன் அவர்கள் பெரிய கண்ணாடி பாட்டில்களால் பின்னால் இருந்து என்னைத் தாக்கினர். என் தலையில் மூன்று கண்ணாடி பாட்டில்களை உடைத்தனர். இதனால், நான் சரிந்து விழுந்தேன்.

அதன் பிறகு, அவர்கள் என்னை உதைத்து தள்ளினர். என் முகம், மூக்கு மற்றும் கண்களை குறிவைத்து சுயநினைவை இழக்கும் வரை என்னை தாக்கினர். எனக்கு சுயநினைவு திரும்பியபோது, ​​நான் என் கல்லூரி மருத்துவமனையில் இருந்தேன். அங்கு எனக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனது நிலையைக் கருத்தில் கொண்டு, கல்லூரி ஆம்புலன்ஸ் என்னை டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றியது. அங்கு மறுநாள் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மாணவர்கள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மின்னஞ்சல் மூலமாகவும் நேரில் சென்று எழுத்துப்பூர்வ புகார்களை அளித்ததாக கேஷ்ரி தெரிவித்தார்.

மேலும், "முன்னெச்சரிக்கையாக, கல்லூரி நிர்வாகம் எனது பாதுகாப்பிற்காக இரண்டு நாட்களுக்கு பாதுகாவலரை எனக்கு வழங்கியது. குறிப்பாக, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான நிதின் பிரதாப் சிங், கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர். வளாகத்தில் அடிக்கடி சட்டவிரோத செயல்களில் அவர் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது," என்று அவர் மேலும் கூறினார்.

இது மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை என்றும், ஐஐடி-க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் ரூர்க்கி ஐஐடி அதிகாரி நரேந்திர பந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.