விளைநிலங்களில் உள்ள ஆபத்தான ரசாயனங்களை உறிஞ்சி அவற்றை ஊட்டச்சத்துள்ள பொருளாக மாற்றும் பாக்டீரியாவை மும்பை ஐஐடி நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பாக்டீரியாவை பயன்படுத்தும் பட்சத்தில் விளைநிலங்களில் பயிர்களுக்கு இட வேண்டிய உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் வெகுவாக குறையும் என மும்பை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தில் உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் விளையும் தானியங்களிலும் நச்சு அதிகளவில் இருப்பதும் அது உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் மும்பை ஐஐடியின் கண்டுபிடிப்பு மிகப்பெரிய பலனை தரும் என கூறப்படுகிறது.
தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களில் நிலத்தடி நீரில் ஆபத்தான நைட்ரேட் ரசாயனம் அதிகளவில் உள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மத்திய நீர்வளத்துறையின் நிலத்தடி நீர் வாரியம் நாடு முழுக்க ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் 20 சதவீதத்தில் அனுமதிக்கப்பட்ட 45 மில்லி கிராமிற்கு மேல் நைட்ரேட் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனித உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் ரசாயனம் என்று கூறப்பட்டுள்ளது.
விவசாயத்தின் போது பயன்படுத்தப்படும் நைட்ரேட் உரங்கள் பூமிக்குள் சென்றதால் இக்கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வறிக்கை கூறியுள்ளது. இது தவிர 9.04% மாதிரிகளில் ஃப்ளூரைடும் 3.55% மாதிரிகளில் ஆர்சனிக்கும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தானிலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில்தான் ரசாயனங்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகளவு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நீரில் நைட்ரேட் அதிகம் கலந்துள்ள மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது.