இந்தியா

மும்பை ஐஐடி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை: சிக்கிய கடிதம்

newspt

மும்பை ஐ.ஐ.டி.யில் முதுகலை பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர் ஒருவர், விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருகிறது ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம். இங்கு முதுகலை முதலாம் ஆண்டு படித்துவரும் 26 வயது மாணவர் ஒருவர், இன்று காலை 4 மணியளவில் விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியின் காவலர், தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது, தரையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசார், ஐஐடி நிர்வாகம், மாணவர்கள் உள்பட அனைவருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து தரையில் கிடந்த அந்த மாணவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டநிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீசாரின் முதற்பட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவர் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தர்ஷன் மால்வியா என்பதும், கடந்த ஜூலை மாதம் முதல் ஐஐடி விடுதியில் தங்கி முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

தர்ஷன் மால்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், விடுதி அறையில் உள்ள பலகையில் கடிதம் எழுதி ஒன்றை ஒட்டி வைத்துள்ளார். அதில், ‘நான் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தேன். அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை’ இவ்வாறு அந்த மாணவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாணவர் தற்கொலை குறித்து, போவாய் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வு இல்லை. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனைப் பெற, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு இலவசமாக ஆலோசனைப் பெறலாம்.