இந்தியா

ட்விட்டரில் போட்டோ சேலஞ்ச் விடுத்த ஐஎப்எஸ் அதிகாரி.. வந்து குவிந்த வண்ணமிகு புகைப்படங்கள்

webteam

ட்விட்டரில் ஐ.எப்.எஸ் அதிகாரி விடுத்த போட்டோ சேலஞ்ச்-க்கு நெட்டிசன்கள் அனுப்பியிருந்த புகைப்படங்கள தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


“இயற்கையானது இங்கு பல வித வண்ணங்களை கொண்டதாக இருக்கிறது. நாம் அதை கண்டு கொண்டாலும் சரி, கண்டு கொள்ளாவிட்டாலும் சரி அது படைப்பின் ஒவ்வொரு கூறுகளிலும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது” இந்த வார்த்தைகளை அப்படியே நிஜமாக்கி இருக்கிறது ஐ.எப்.எஸ் அதிகாரி பர்வின் கஸ்வானின் ட்விட்டர் பக்கத்தில் குவிந்திருக்கும் வண்ணமிகு புகைப்படங்கள்.

ஆம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் வீட்டில் முடங்கியிருக்கும் பலரும் ஆன்லைனில் பல்வேறு விஷயங்களில்  ஈடுபடுகின்றனர்.  அதில் ஒன்றுதான் சேலஞ்ச். சேரி (Saree) ஃபோட்டோ சேலஞ்ச் தொடங்கி பல்வேறு வகையான சேலஞ்சுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி ஐ.எப்.எஸ் அதிகாரி பர்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் “ சரி. என்னுடைய புகைப்பட நண்பர்களுக்கு ஒரு சேலஞ்ச் விடுகிறேன். நீங்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள், அது வனவிலங்காகவோ, இயற்கை காட்சியாகவோ இருக்கலாம். அந்த புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள், இயற்கையின் வண்ண ஜாலங்களை பார்ப்போம்” என்று குறிப்பிட்டு இருந்தார். ,

Ok. Challenge for all my photographer friends. Bring your best picture. Wildlife, landscape, portrait. Lets see the colours. pic.twitter.com/FASaHRh8e0

பர்வின் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே, அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் வந்து குவியத் தொடங்கி விட்டன. மனித உணர்வுகளை கடவுளின் அருகில் கொண்ட சேர்த்த அந்த புகைப்படங்களின் வண்ண ஜாலங்கள், தற்போது ஒன்றை ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு பர்வினின் ட்விட்டர் பக்கத்தில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

அதில் ஐ.எப்.எஸ் அதிகாரி அன்கித் குமார் காலை நேர பனியில், தனது குட்டியுடன் நின்று கொண்டிருந்த காண்டாமிருகத்தின் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். அவர் பதிவிட்டிருந்த பதிவில் “இந்தப் புகைப்படம் அஸ்ஸாமில் அமைந்துள்ள பொபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படம் எடுக்கும்போது காண்டாமிருக குட்டி பிறந்து 10 நாட்களே ஆகியிருந்தன, அந்த காண்டாமிருகத்திற்கு இது முதல் குட்டி” என பதிவிட்டிருந்தார்.

மற்றொருவர் அனுப்பியிருந்த புகைப்பட பதிவில் வண்ணத்துக்கே சொந்தக்காரியான பச்சோந்தியின் புகைப்படத்தை பதிவிட்டு “நீங்கள் கேட்ட வண்ணங்கள்” என குறிப்பிட்டுள்ளார். மஞ்சள் பின்னணியில் சிவப்பும், நீலமுமாக  நிற்கும் அந்தப் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இன்னொருவர் அனுப்பி இருந்த புகைப்படப் பதிவில் “ மாலை நேர வெளிர்சிவப்பு பின்னணியில் ஒய்யாரமாய் நின்று கொண்டிருந்த ஒட்டக சிவிங்கியின் புகைப்படம் இருந்தது.

பர்வின் தபாஸ் அனுப்பியிருந்த புகைப்பட பதிவில் “ தான் ஆழ்கடலில் புலி சுறாவை நேருக்கு நேர் சந்தித்த புகைப்படம் இது எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து பர்வின் பதிவிட்ட பதிவில் “ என்னா வரவேற்பு, தற்போது வரை 2500 புகைப்படங்கள் வந்து சேர்ந்துள்ளன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. வனவிலங்குகள் குறித்த தகவல்களோடு இந்த வண்ணமயமான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை மிரட்டி வருகின்றன” என பதிவிட்டுள்ளார்.