தரமான சாலைகள் வேண்டுமெனில் சுங்கக் கட்டணங்களை மக்கள் முறையாக செலுத்த வேண்டும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சுங்கக் கட்டணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது நிதின் கட்கரி பேசினார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விவாதத்தின் போது, நாட்டின் பல பகுதிகளில் சுங்கக் கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.
அதற்குப் பதிலளித்த நிதின் கட்கரி, “அந்தந்த பகுதியில் செலுத்த வாய்ப்புள்ள கட்டணங்கள்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. காலத்திற்கு தகுந்தாற்போல், சுங்கக் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். ஆனால், ஒருபோதும் முடிவுக்கு வராது. தரமான சாலைகள் வேண்டுமெனில், சுங்கக் கட்டணம் செலுத்துங்கள். சுங்கச் சாவடி என்னுடைய சிந்தனையில் பிறந்த குழந்தை” என்று கூறினார்.