இந்தியா

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகத்திற்கு பாதிப்பு - மணீஷ் திவாரி

PT WEB

தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தப்போது, மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரைத்திருந்தார். தற்போது 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி தனது ட்விட்டர் பதிவில், மறுசீரமைப்பின் மூலம் 2024-ஆம் ஆண்டு தேர்தலுக்குள் மக்களவை தொகுதிகளை ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். தற்போதைய மக்கள் தொகையின்படி ஒரு தொகுதிக்கு 7 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

இதனை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் மக்களவைத் தொகுதிகள் 1,200ஆக அதிகரிக்கும் என்றும், இதில் தமிழ்நாடு மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதாவது மக்களவையில் தமிழக பிரதிநிதித்துவம் 7.2 சதவிகிதத்தில் இருந்து 6.4 சதவிகிதமாக குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களும் அதிக இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதுவே உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் எனவும் மணீஷ் திவாரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.