இந்தியா

"போலி வாக்குறுதிகள் அளிப்பதில் கெஜ்ரிவால் முதலிடம்" - அமித் ஷா விமர்சனம்

webteam

போலியான வாக்குறுதிகள் அளிப்பவர்களுக்கு பரிசு கொடுத்தால், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெர்ஜிவால் முதலிடம் பிடிப்பார் ‌என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி‌ தேர்தல் நடைபெறவுள்ளது. ‌இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஊழலை ஒழிப்போம் என்று கூறி‌ய கெர்ஜிவால், அதற்கான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றவில்லை. நீங்கள் அளித்த வாக்குறுதியை நீங்கள் மறக்கலாம். ஆனால் டெல்லி மக்களும் பாஜக ஊழியர்களும் மறக்கவில்லை.

நீங்கள் அன்னா ஹசாரே உதவியுடன் முதல்வராக ஆனீர்கள். ஆனால் லோக்பாலுக்கு ஒரு சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. மோடி கொண்டு வந்தபோது அதை இங்கே செயல்படுத்தவில்லை. நான்கரை ஆண்டுகளாக முதலமைச்சர் கெஜ்ரிவால் பிரதமர் மோடியை வேலை செய்யவிடவில்லை. எனவே டெல்லியை வளர்ச்சியடைய செய்ய முடியவில்லை” என்று சாடினார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டினார். இதேபோல் அரவிந்த் கெர்ஜிவாலும் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.