இந்தியா

“தனிமைப் படுத்திக்கொள்ள டிப்ஸ் வேண்டுமா ?” - உமர் அப்துல்லா நையாண்டி

webteam

யாருக்காவது தனிமையில் வசிக்க அறிவுரைகள் வேண்டுமென்றால் தன்னிடம் கேட்கலாம் என காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கிண்டலடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370 ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது காஷ்மீர் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் அம்மாநிலத்தின் கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களை மத்திய அரசு வீட்டுக்காவலில் வைத்தது. அந்த வகையில் கடந்த 8 மாதங்களாக காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை வீட்டுச் சிறையில் இருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதை குறிப்பிடும் வகையில் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனிமையில் அல்லது ஊரடங்கு உத்தரவில் எப்படி வாழ்வது என்ற டிப்ஸ் வேண்டுமென்றால், என்னிடம் கேளுங்கள். அதில் எனக்கு பல மாத அனுபவம் உள்ளது. கமெண்டில் கருத்துகளை பகிரலாம்” என தெரிவித்துள்ளார். அத்துடன், “கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி இருந்ததில் இருந்து தற்போது உள்ளது ஒரு வித்தியாசமான உலகம், தற்போது இருக்கும் முதல் கடமை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக போராடுவதுதான் என்றார் அவர்.