இந்தியா

கந்தஹார் விமானக் கடத்தலில் பயணியின் கழுத்தை அறுத்த தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

ஜா. ஜாக்சன் சிங்

கந்தஹார் விமானக் கடத்தலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி, நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு செல்ல வேண்டிய இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

179 பயணிகளுடன் காத்மாண்டுவில் இருந்து கடத்தப்பட்ட அந்த விமானம், ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இந்திய அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் வலியுறுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, விமானத்தையும், பயணிகளையும் தீவிரவாதிகள் விடுவித்தனர்.

இந்த விமானத்தை கடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் மிஸ்ட்ரி ஜஹூர் இப்ராஹிம். இவர் அந்த விமானத்தில் இருந்த ஒரு இளைஞரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அவர், பகுதிநேரமாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஃபர்னிச்சர் கடை ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி தனது வீட்டுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த அவரை, அடையாளம் தெரியாத நபர் சுட்டுக் கொன்றார். கராச்சியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கில் ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் ரவுஃப் அஸ்கார் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இசம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.