மேற்கு வங்கத்தில், புத்த பூர்ணிமா தினத்தன்று பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்ப்பிணி போன்ற ஒருவர் இந்து மதக்கோவில் அல்லது புத்த மத வழிபாட்டுத் தலத்திற்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை மேற்கு வங்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கதேச அரசுக்கும் இதுதொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வங்க தேசத்தைச் சேர்ந்த ஜமாத் உல் முஜாகிதீன் அல்லது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் இந்து மதக் கோவில்கள் மற்றும் புத்தமத வழிபாட்டுத் தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், ''முக்கிய நகரங்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே மாதிரியான ஒரு எச்சரிக்கையை இலங்கை கவனத்தில் கொள்ளாமல் விட்டதால் பெரும் உயிரிழப்புகளை சந்தித்தது. நாங்கள் அந்த தவறை செய்ய மாட்டோம். மாநிலம் உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் நாளன்று இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தாக்குதல் நடத்தலாம் என்று வெளியாகியுள்ள செய்தி அம்மாநில மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.