இந்தியா

ஜனநாயகம் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது: பணியை துறந்த மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி

ஜனநாயகம் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது: பணியை துறந்த மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி

Rasus

கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் தற்போது கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்டத்தில் துணை ஆணையராக உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனநாயகம் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது எனக் கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், “ பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு முறையில்லாமல் சமரசத்திற்கு உள்ளாக்கப்படும்போது அதில் சிவில் சர்வீஸ் ஊழியராக தொடர்வது நியாயமற்றது.

மேலும் வரும் நாட்களில் நாட்டின் அடிப்படை தன்மையை சிதைக்கும் வகையில் பல்வேறு கடினமான சவால்களை சந்திக்க நேரிடும். எனவே எனது சிவில் சர்வீஸ் பணியினை தொடராமல் வெளியே இருந்துக் கொண்டு எல்லோருக்குமான எனது பணியினை செய்ய உள்ளேன்” எனக் கூறியுள்ளார். ராஜினாமா தனது தனிப்பட்ட முடிவு எனவும் சசிகாந்த் செந்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

40 வயதான அவர் தமிழகத்தை சேர்ந்தவர். திருச்சியில் உள்ள பி.இ பொறியியல் படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.