மம்தா பானர்ஜி, சி.முருகன் எக்ஸ் தளம்
இந்தியா

மேற்குவங்கத்தில் பேசுபொருளான தமிழக ஐஏஎஸ் அதிகாரி சி.முருகன்.. யார் இவர்?

தமிழக ஐஏஎஸ் அதிகாரியும், எஸ்ஐஆர் (SIR) பணிகளை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு அதிகாரியுமான சி.முருகன் மேற்கு வங்கத்தில் பேசுபொருளானது ஏன் என்பது குறித்து இத்தொகுப்பில் பார்ப்போம்.

PT WEB

மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்கவைக்க திரிணமூல் காங்கிரசும் ஆட்சியைத் தட்டிப்பறிக்க பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த அரசியல் யுத்தத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சி.முருகன் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிக்கும் சிறப்பு அதிகாரியாக உச்ச நீதிமன்றம் சி.முருகனை நியமித்திருக்கிறது. ஆனால், இவரது செயல்பாடுகள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வாக்காளர்களை நீக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்வதாக திரிணமூல் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. SIR நடைமுறைகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை முருகன் உள்ளிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளிப்படையாக மீறுவதாக டிஎம்சி பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

West Bengal CM and Abhishek banerjee

இந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி முருகன் குறித்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ரா தனது X சமூக வலைத்தளத்தில் ’குயிக் கன் முருகன்’ என திரைப்பட கதாபாத்திரத்தின் பெயரை பயன்படுத்தி கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.

அதற்கு ஐஏஎஸ் அதிகாரி முருகன் பதிலடி கொடுத்துள்ளார். அவர், ”படத்தில் காட்டப்பட்டுள்ள அளவுக்கு என்னிடம் துப்பாக்கிகள் இல்லை என்றும் பல்வேறு வகையான துப்பாக்கிகளைக் கையாள எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், மேலும் தமிழ்நாட்டில் எனது நான்கரை ஆண்டுகால காவல் பணியில் அவற்றை சட்டப்பூர்வமாகவும் திறம்படவும் பயன்படுத்தினேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கு முன் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றியவர் சி.முருகன் என்பதும் டெல்லி திஹார் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.