மத்திய மின்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, உள்துறை அமைச்சகத்திற்கு சிறப்பு அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது உள்துறை செயலாளராக இருக்கும் ராஜீவ் கவ்பா வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து அஜய்குமார் பல்லா உள்துறை செயலாளராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜய்குமார் பல்லாவை உள்துறையின் சிறப்பு அதிகாரியாக உடனடியாக நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு உத்தரவு பிறப்பித்தது. அஜய்குமார் பல்லா அடுத்த உள்துறை செயலாளராக நியமிக்கப்படுவார் என உத்தரவில் கூறப்படவில்லை. எனினும், உள்துறை செயலாளர் இருக்கும்போது அடுத்த உள்துறை செயலாளராகப் பதவியேற்க உள்ளவரை உள்துறை சிறப்பு அதிகாரியாக நியமிப்பது மரபு என கூறப்படுகிறது.
அஜய்குமார் பல்லா உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டால் அவர் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருப்பார். இதைத் தவிர பல்வேறு துறைகளுக்கான செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக அடனு சக்கரவர்த்தி, மின்துறை செயலாளராக எஸ்.சி. கார்க், அலுவல் மொழிகளுக்கான துறையின் செயலாளராக அனுராதா மித்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1986ஆம் ஆண்டு இந்திய அரசு பணியில் சேர்ந்த எட்டு அதிகாரிகள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே ஆண்டு தேர்ச்சி பெற்ற 12 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்புச் செயலாளர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.