இந்தியா

வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவம்: மெய்சிலிர்க்கும் காட்சி

webteam

ஜம்முவில் தாவி ஆற்றின் நடுவே வெள்ளப்பெருக்கில் சிக்கிய இருவர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் ஜம்மு அருகே பாய்ந்தோடும் தாவி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணி நடைபெற்று வரும் இடத்தில் மீனவர்கள் 4 பேர் சிக்கினர். இதில் 2 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மேலும் இருவர் கரைக்கு செல்லமுடியாமல் அங்கிருந்த தடுப்புசுவரின் மீது ஏறி நின்று காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பினர். இதனையறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவை தோல்வியில் முடிந்ததால் ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் ராணுவ வீரர் கிழே இறங்கி, இவருவருக்கும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். ஆற்றின் நடுவே சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் இருவரையும் மீட்ட ராணுவத்தினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மற்ற இருவரை வேறு இடத்தில் காவல்துறையினர் மீட்டனர்