இந்தியா

இது அவசரமாக உருவாக்கப்பட்ட கிச்சடி கூட்டணியில்லை: பட்னாவிஸ்

இது அவசரமாக உருவாக்கப்பட்ட கிச்சடி கூட்டணியில்லை: பட்னாவிஸ்

webteam

’மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைய வேண்டும் என்று பாஜகவுடன் சேர்ந்த தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாருக்கு நன்றி’ என்று முதலமைச்சராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.

பதவி பிரமாணத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், பாரதிய ஜனதா கட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை என்றும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்வது நல்லதல்ல என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இது அவசரமாக உருவாக்கப்பட்ட கிச்சடி கூட்டணியில்லை என்றும் நீண்ட நாள்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இந்தக் கூட்டணியை ஏற்படுத்திய தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்தான் இந்த முடிவை எடுத்து பாஜவுடன் பேசினார் என்றும் மேலும் சில கட்சிகளின் தலைவர்களும் எங்களுடன் வந்ததால், பெரும்பான்மையுடன் அரசமைக்க உரிமை கோரினோம் என்றும் தெரிவித்துள்ளார்.