பிரதமர் நரேந்திர மோடி தன்மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் நாள், கட்சித் தலைமையும், பிரதமரும் நம்பிக்கை அதிகம் வைத்து மிகப்பெரிய பொறுப்பை எனக்கு அளித்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் பொருட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். அதற்காக கடுமையாக உழைப்பேன்” என்று கூறினார். மத்திய அமைச்சரவை ஒன்பது புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் நாட்டின் இரண்டாவது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆவார், முதலாவதாக இந்திரா காந்தி இந்த பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.