இந்தியா

கணக்கில் வராத ரூ.300 கோடி: ஐ.டி. ரெய்டில் கண்டுபிடிப்பு

கணக்கில் வராத ரூ.300 கோடி: ஐ.டி. ரெய்டில் கண்டுபிடிப்பு

webteam

பெங்களூரில் காங்கிரஸ் அமைச்சர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட  வருமான வரி ரெய்டில் கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெங்களூருவில் அமைச்சர் டி.கே.சிவகுமார் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வந்தது. பெங்களூரு என்.ஆர்.காலனியில் உள்ள சர்மா டிராவல்ஸ் உரிமையாளர் சுனில்குமார் சர்மாவின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சர்மா வீட்டில் 16 லாக்கர்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து திறந்தனர். அதில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

 டி.கே.சிவகுமார், அவரது உறவினர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் வீடுகளில் இருந்து ரூ.11.43 கோடி, ரூ.4.44 கோடி மதிப்பிலான தங்க நகைகள், முக்கிய சொத்து பத்திரங்கள், ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந் நிலையில், 4வது நாளாக அமைச்சர் டி.கே.சிவகுமார், மைசூருவில் உள்ள அவரது உறவினர் திம்மையா, சுனில்குமார் சர்மா ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இந்நிலையில் டெல்லி, பெங்களூரு என 64 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 300 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ரூ.100 கோடி, சிவகுமார் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. மீதம் ரூ.200 கோடி ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடையது என வருமான வரித்துறை கண்டுபிடித்து உள்ளது.