அலுவலக உதவியாளராக இருந்த காலம் முதல் இன்றுவரை தான் கோபப்பட்டதே இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியும் நாடு முழுக்க தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அரசியல், தேர்தல் தொடர்பு அல்லாத அக்ஷயகுமாரின் பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அதில், “ கோபம் என்பது மனித குணத்தின் ஒரு பகுதியே. ஆனால் கோபப்படுவது என்பது எதிர்மறையான எண்ணங்களை பரப்புகிறது. நான் அலுவலக உதவியாளராக இருந்த நாள் முதல் இன்று பிரதமராக இருக்கும் வரை கோபப்படும் சூழல் ஏற்பட்டதே இல்லை. அதனால் நான் கோபப்பட்டதும் இல்லை. என்னிடம் பணிபுரியும் யாரிடமும் கூட நான் கோபத்தை காட்டியதே இல்லை. சில நேரங்களில் கண்டிப்பாக இருந்திருக்கிறேன். ஆனால் கண்டிப்புக்கும், கோபத்துக்கும் வேறுபாடு உண்டு. ஒரு கூட்டத்தில் நீங்கள் கோபப்படும் போது அது அனைவரையுமே திசைதிருப்பிவிடும்” என தெரிவித்துள்ளார்.