இந்தியா

பரதநாட்டிய அசைவுகளை கேபி.கிட்டாப்பாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் - ஹேமமாலினி

webteam

உலகத்தில் உள்ள அனைத்து கலைகளுக்கும் இடம் உள்ளது என நடிகையும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி தெரிவித்தார்.

பரதக் கலைஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையின் 16-வது நினைவு நாட்டிய விழா தஞ்சையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரா தொகுதி மக்களவை உறுப்பினரும், ஹிந்தி திரைப்பட நடிகையுமான ஹேமமாலினி கலந்து கொண்டார். இளம் பரதநாட்டிய கலைஞர்கள் அரங்கேற்றிய நாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்து அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... பரதநாட்டியத்திற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அதனை கற்றுக்கொள்ள மாணவர்களும் உள்ளனர். அதேபோல் திரைப்படத்தில் உள்ள நடனம் அது வேற மாதிரி. உலகத்தில் உள்ள அனைத்து கலைகளுக்கும் இடம் உள்ளது. சினிமாவில் வந்துவிட்டது என்பதால் ரசனை குறைந்து விட்டது என்பது இல்லை என தெரிவித்தார்.

முன்பாக நிகழ்ச்சியில் பேசிய அவர்... எனது குருவான கே.பி.கிட்டப்பா பிள்ளையிடமிருந்து தான் பரத நாட்டியத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். பரத நாட்டியத்திலுள்ள அனைத்து அசைவுகளையும் அவர் எனக்குக் கற்றுத் தந்தார். அதையெல்லாம் இப்போது நினைத்து பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவர் மறைந்து 16 ஆண்டுகள் கடந்து விட்டாலும், அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியவில்லை. திரைப்படத்தில் நடித்ததால், அதில்தான் நிறைய நாட்கள் கடந்தன. அதே நேரத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து நடத்தி வந்தேன். அப்போது, கிட்டப்பா பிள்ளை எனக்கு நிறைய புதிய விஷயங்களை சொல்லித் தருவார். அவையெல்லாம் எனது வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இருந்தது என்று ஹேமமாலினி கூறினார்.