இந்தியாவில் உள்ள இருபெரும் அரசியல் கட்சிகளால் தான் பந்தாடப்படுவதாக பணமோசடி புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவர அமலாக்கத்துறை, வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் நகரில் நடந்த எஃப்1 கார் பந்தய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் மல்லையா, இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாவது போல தான் எந்தவொரு குற்றமும் இழைக்கவில்லை என்று தெரிவித்தார். வாராக்கடன் வழக்கு சிவில் வழக்குதான். ஆனால் என் மீதான குற்றச்சாட்டுகளை கிரிமினல் வழக்குகளாக மாற்ற சிபிஐ முயல்கிறது என்றார் விஜய் மல்லையா.