நிபா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக மத்திய அமைச் சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை கேரள சுகாதாரத்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். ஆனாலும் சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே உறுதி யான தகவல் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை கேரள அரசு உறுதி படுத்தியுள்ளது. 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்
கேரள அரசு நிபா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மருத்துவர்களும், மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிபா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘’டெல்லியில் உள்ள எனது இல்லத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரி களுடன் நிபா வைரஸ் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். நிபா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதற்காக 6 பேர் கொண்ட குழுவை நேற்றிரவு கேரளாவுக்கு அனுப்பியுள்ளோம். கேரளாவுக்கு என்ன உதவி என்றாலும் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளோம். இதற்காக பீதி அடைய வேண்டாம்’’ என்றார்