கடலில் மாயமான மீனவர்களின் எண்ணிக்கையை வைத்து வாதம் செய்ய விரும்பவில்லை எனவும், மாயமான மீனவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே இலக்கு என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒகி புயலால் கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் மீனவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் கடலில் மாயமான மீனவர்களை, வெறும் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமல்லாமல், கடலில் தத்தளிக்கும் அனைத்து மீனவர்களும் மீட்கப்படுவார்கள் என்றார். காணாமல் போன மீனவர்களின் விவரம் முரண்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கடிதத்தையும் சுட்டிக்காட்டிய அவர், வெறும் எண்ணிக்கையை வைத்து வாதம் செய்ய விரும்பவில்லை என்றும் மாயமான மீனவர்களை மீட்பதே இலக்கு என்றும் தெரிவித்தார்.