இந்தியா

“அந்த வயதில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை” - வெளியான ஒரு உண்மை சாட்சியம்

“அந்த வயதில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை” - வெளியான ஒரு உண்மை சாட்சியம்

webteam

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் பேட்டிகளை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தனது சொந்த கிராமத்தில் சிறியவளாக இருந்த போது கல்லூரி மாணவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம் பெண் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 

அந்த இளம் பெண் கூறுகையில், “அப்போது நான் அவ்வளவு சிறியவளாக இருந்தேன். திரும்ப, திரும்ப ஒருவனால் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொண்டிருந்த அந்த நேரத்தில், எப்படி என்னுடைய எதிர்ப்பை தெரிவிப்பது? பெற்றோர்களுக்கு இந்தப் பிரச்னையை எப்படி புரிய வைப்பது என்று எனக்கு தெரியவில்லை. 

கிராமங்களில் எல்லோருக்கும் ஒவ்வொருவரையும் தெரியும். பெரும்பாலும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாகதான் இருப்பார்கள். என்னை பாலியல் வன்கொடுமை செய்வதவரும் தூரத்து உறவினர்தான். அவர் அப்போது கல்லூரி படித்துக் கொண்டிருந்தார். எனக்கு 10 வயதுகூட ஆகவில்லை. ஹரியானாவில், எங்களுடைய கிராமத்திலுள்ள அவரது வீட்டில் என்னை திரும்ப, திரும்ப பாலியல் வன்கொடுமை செய்தார். அதுவரை நான் அவரை  அண்ணா என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தேன்.

அவரது வீட்டிற்கு பால் வாங்க என்னுடைய அம்மா அனுப்புவார். அப்போதுதான் அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த வயதில், என்ன நடக்கிறது என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அது சரியல்ல என்று எனக்கு தெரிந்தது. பால் வாங்க செல்லுமாறு என்னுடைய அம்மா சொல்லும் போது எல்லாம் அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால், எனக்கு நடந்து கொண்டிருந்ததை சொல்ல தைரியம் இல்லை. பின்னர் பல முறை பால் வாங்க செல்ல மாட்டேன் என்று சொல்வேன். ‘ஏன் போகமாட்டாய்’ என்று என்னுடைய அம்மா கேட்பார். பின்னர் ஒருவழியாக அவர் பால் வாங்க சென்றுவிடுவார். 

பின்னர் எங்கள் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்த போது இந்தப் பாலியல் தொல்லை முற்றிலும் நின்றது. சில ஆண்டுகள் கழித்து அந்த நபர் என்னுடைய வீட்டிற்கு வந்தார். அவருக்கு திருமணம் ஆகி இருந்தது. அவரை பார்த்தவுடன் முகத்தை திரும்பிக் கொண்டு என்னுடைய அறைக்கு சென்றுவிட்டேன். இப்படி நடந்து கொண்டதற்காக என்னுடைய பெற்றோர்கள் என்னை திட்டினார்கள். எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று என்னுடைய இதயம் துடித்தது. எனக்கு வயது வெறும் 12 தான். அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. 

கடந்த ஆண்டு நான் கல்லூரியில் சேர்ந்த போது, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பற்றி கேள்விப் பட்டேன். அந்த அமைப்பில் நான் சேர்ந்தேன். எனக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையாக பேச நம்பிக்கை பிறந்தது. அதேநேரத்தில் என்னைச் சுற்றி நடக்கும் குற்றங்கள் குறித்து கேள்வி கேட்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். தற்போது, யாராவது என்னுடைய கண் முன்னால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை பார்த்தால் உடனே அவரை நிறுத்துமாறு சத்தம் போட்டுவிடுவேன். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் உதவிக்கு வரமாட்டார்கள். அவர்கள் சும்மா பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். இதுதான் முதலில் மாற வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டாக எதிர்ப்பை தெரிவித்தால்தான் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு பயம் வரும். 

இந்த உரையாடல்களை நம்முடைய பிரச்னைகளுக்காக மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மற்றவர்களின் பிரச்னைக்காகவும் பேச வேண்டும். இதுபோன்ற சூழலில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து என்னுடைய பெற்றோர்களுக்கு இன்றும் தெரியாது. இந்த உரையாடலின் பின் விளைவுகள் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். இருப்பினும், விரைவில் என்னுடைய பெயரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் செய்யப்பட வேண்டும்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.