சமாஜ்வாதிக் கட்சியின் தேசியத் தலைவர் தாமே என்று முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதிக் கட்சியில் தந்தை முலாயம் மற்றும் மகன் அகிலேஷ் இடையே அதிகாரம் தொடர்பான மோதல் முற்றி வருகிறது. கட்சியின் சின்னமான சைக்கிள் தங்களுக்கே சொந்தம் என்று இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக முறையிட்டுள்ளனர். இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முலாயம்சிங் யாதவ், கட்சியின் தேசியத் தலைவர் நானே. அதேநேரம் உத்தரப்பிரதேச முதலமைச்சராக அகிலேஷ் யாதவ் தொடருவார். மாநிலத் தலைவராக ஷிவ்பால் யாதவ் இருப்பார். கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் கடந்த டிசம்பர் 30ம் தேதியே நீக்கப்பட்ட நிலையில், ஜனவரி 1ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட அவருக்கு அதிகாரமில்லை. அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானது என்று தெரிவித்தார். கட்சியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி கூடிய பொதுக்குழுவில் சமாஜ்வாதிக் கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.