இந்தியா

''பிபின் ராவத் இழப்பு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது'' - குடியரசுத்தலைவர் இரங்கல்

கலிலுல்லா

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் இழப்புக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 12 மணியளவில், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருந்தது. மூப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த இந்த விமானத்தில், பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவரது இழப்புக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஜியின் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்கான அவரது நான்கு தசாப்தகால தன்னலமற்ற சேவை பெருமை கொள்ளத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.