இந்தியா

“குடிசைவாசிகளில் ஒருவனாக இருக்கிறேன்’ -பாஜக பேனரை டேக் செய்த எழுத்தாளர் பெருமாள் முருகன்!

EllusamyKarthik

தலைநகர் டெல்லியில் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதில் பாஜக-வும் உள்ளது. குடிசை பகுதியில் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் டெல்லியில் அமைந்துள்ள குடிசை பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது பாஜக. 

அதன் ஒரு பகுதியாக பேரணியும் நடத்தி வருகிறது அக்கட்சி. இந்த நிலையில் இன்று டெல்லியின் நேரு நகர் பகுதியில் நடைபெற்ற பேரணி தொடர்பான பாஜக சார்பில் வைக்கப்பட்ட பதாகையில் (பேனர்) பிரபல தமிழ் எழுத்தாளரும், பேராசிரியருமான பெருமாள் முருகனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 

இந்த பதாகையில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, டெல்லி பிரதேச கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சிலரது படங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் பொதுமக்கள் படங்கள் இடம் பெற்றுள்ள வரிசையில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் படம் இடம் பெற்றுள்ளது.  

இந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதை கவனித்த எழுத்தாளர் பெருமாள் முருகன் “குடிசைவாசிகளில் ஒருவனாக இருக்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி” என சொல்லி, அது தொடர்பான செய்தியை தனது முகநூல் பக்கத்தில் டேக் செய்து தெரிவித்துள்ளார்.