இந்தியா

“நான் இந்தியன் என்பது எனது அதிர்ஷ்டம். ஆனால்…” - பாரத ரத்னா கோரிக்கை குறித்து ரத்தன் டாடா!

EllusamyKarthik

“நான் இந்தியன் என்பது எனது அதிர்ஷ்டம்’’ என பாரத ரத்னா கோரிக்கை விடுக்கும் அவரது ரசிகர்களுக்கு ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்

இந்திய நாட்டின் முன்னணி தொழிலதிபரும், டாடா அறக்கட்டளையின் தலைவருமான ரத்தன் டாடாவிற்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுக்க வேண்டும் என ட்விட்டர் தளமே திக்குமுக்காடும் வகையில் ட்வீட் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர் ட்விட்டர் பயனர்கள். இந்நிலையில் இது தொடர்பாக ரத்தன் டாடா ட்வீட் செய்துள்ளார். அதில் “நான் இந்தியன் என்பது எனது அதிர்ஷ்டம்” என மேற்கோள் காட்டியுள்ளார்.

“எனக்கு ஒரு விருது கொடுக்க வேண்டுமென சமூக ஊடகங்களில் ஒரு சிலர் வெளிப்படுத்திய அவர்களது உணர்வுகளை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் இதுபோன்ற செயல்களை கூடுமான வரையில் உடனடியாக நிறுத்த வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாறாக நான் ஒரு இந்தியனாக இருப்பதும், இந்தியாவின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பதற்காகவும் நான் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்” என அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார். 

83 வயதான ரத்தன் டாடா தன்னால் முடிந்த உதவிகளை சமூகத்திற்கு மறைமுகமாக செய்து வருகிறார். சமயங்களில் அது மாதிரியான அவரது உதவிகள் வெளிச்சத்திற்கு வரும் போது சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படுவதும் உண்டு. பத்ம விபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.