பேட்டி கொடுக்க டெல்லி வரவில்லை. விவசாயிகள் படும் கஷ்டம்தான், தன்னை டெல்லி வரச் செய்ததாக நடிகர் விஷால் கூறினார்.
டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக, தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரண நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு நடிகர் சங்கப் பொதுசெயலாளர் விஷால் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அவருடன் பிரகாஷ் ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் உடன் இருந்தனர். அப்போது பேசிய விஷால், விவசாயிகள் பிரச்னை காலங்காலமாக இருந்து வருகிறது. நான் பேட்டிக் கொடுப்பதற்காக டெல்லி வரவில்லை. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் வீடியோ ஒன்றை நேற்றுமுன் தினம் பார்த்தேன். அதில் அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்துதான் இங்கே வந்தேன். சில பேருக்குப் பிரச்னை என்றால் தனிப்பட்ட முறையில் என்னால் கொடுத்து உதவிட முடியும். ஆனால் விவசாயிகளின் பிரச்னை பெரியது. அவர்கள் எதிர்பார்க்கும் தொகையும் பெரியது. எனவே சம்பந்தப்பட்ட அமைச்சர் வந்து அவர்களுக்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.