இந்தியா

“நாட்டுக்காக மகன் உயிர்த்தியாகம் செய்ததில் மகிழ்ச்சி” - எல்லையில் இறந்த கர்னலின் தாய்

webteam

தனது மகன் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ததை நினைத்து மகிழ்ச்சி அடைவதாக லடாக் எல்லையில் சீன தாக்குதலில் வீர மரணம் அடைந்த கமாண்டோ அதிகாரியின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே நடைபெற்ற கைகலப்பு மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி என்பவர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். இதில், தெலங்கானாவின் சூர்யபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் பாபு என்ற ராணுவ கமெண்டோ அதிகாரியும் உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது மகனின் இறப்பு குறித்து பேட்டியளித்துள்ள கமெண்டோ அதிகாரியின் தாய், “ஒரு தாயாக நான் மிகவும் வருந்துகிறேன். இருப்பினும் எனது மகன் நாட்டிற்காக போரிட்டு உயிர்த்தியாகம் செய்தான் என நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “இந்திய வீரர்களின் உயிரிழப்பால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நாட்டிற்காக உயிர்த்தியாகம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.