தமிழகத்தை பொருத்தவரையில், வேறுவடிவத்துக்கு மாற்றமுடியாத ஹைட்ரோகார்பன்களை எடுக்கும் திட்டம் இல்லை என ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அந்த நிறுவனத்தின் 11ஆவது கொள்கை முடிவெடுக்கும் கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களைச் சந்தித்த ஓஎன்ஜிசி துரப்பணி பிரிவு இயக்குனர் ஏ.கே.திவேதி, ஹைட்ரோகார்பன் திட்டத்தால், நெடுவாசல் பகுதி பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
மேலும், வேறுவடிவிற்கு மாற்றக்கூடிய ஹைட்ரோ கார்பன்களை எடுக்கும் திட்டத்தின் மூலம், நிலத்தடி நீர்மட்டத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறிய அவர், நிலக்கரி, மீத்தேன், ஷேல் கேஸ் ஆகியவை மாற்றமுடியாத ஹைட்ரோ கார்பன் வளங்களாகும். தற்போதைய சூழலில், ஓஎன்ஜிசி அமைத்துள்ள துரப்பணங்களில், வேறுவடிவிற்கு மாற்றக்கூடிய ஹைட்ரோ கார்பன்கள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதுகுறித்து, எண்ணெய் வயல்கள் அமைத்துள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, ஓஎன்ஜிசியும், அரசு தரப்பிலும், இருவேறு ஹைட்ரோ கார்பன்களுக்கான வேறுபாடுகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தால், நிலத்தடி நீர்மட்டத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை என கூறினார்.