பெண் தற்கொலை file image
இந்தியா

2 குழந்தைகளையும் வீசிவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்து பெண் விபரீத முடிவு! இன்னுமா இந்த கொடுமை?

பெண்மணி ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை அடுக்குமாடி கட்டடத்தின் எட்டாவது மாடியில் இருந்து வீசி எறிந்துவிட்டு, அதே கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

Prakash J

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பன்சிலால்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சௌந்தர்யா என்ற 21 வயது பெண், தன்னுடைய இரட்டைக் குழந்தைகளான, ஒன்றரை வயதுடைய நித்யா மற்றும் நிதர்ஷ் ஆகியோரை எட்டாவது மாடியில் இருந்து வீசி எறிந்தார். பின்னர் அந்த பெண், அதே கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், “தற்கொலை செய்துகொண்ட அந்தப் பெண் அதே கட்டடத்தில், தன் பெற்றோருடன் வசித்து வந்ததாகவும், அவருடைய கணவர் கணேஷ் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், அதைத் தாங்க முடியாமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்” என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சௌந்தர்யாவின் குடும்பத்தினர், “கணேஷ் வரதட்சணை கேட்டு என் மகளைக் கொடுமைப்படுத்தினார்” என அவர்கள் அளித்த புகாரின் பேரில், காந்திநகர் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.