இந்தியா

மோடிக்கு வாக்கு கேட்டு திருமண அழைப்பிதழ்

மோடிக்கு வாக்கு கேட்டு திருமண அழைப்பிதழ்

webteam

தெலங்கானா மாநிலத்தில், நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்கும் ஊடகமாக திருமண அழைப்பிதழை ஒருவர் மாற்றியுள்ளார்.

தங்களது திருமண அழைப்பிதழ்களில் வித்தியாசம் காட்ட இன்றைய கால இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக், சாக்லெட் இன்னும் பல வித்தியாசமான வடிவங்களில் திருமண அழைப்பிதழ்கள் அச்சாகின்றன. இப்படி இருக்க, நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்டு ஒருவர் திருமண பத்திரிகை அச்சிட்டுள்ளார்.

ஐதராபாத் நகரை சேர்ந்த சுபாஸ் என்பவர் தனது மகனின் திருமண அழைப்பிதழில், மோடிக்கு ஓட்டு போடுங்கள் அதுவே திருமணத்திற்கு நீங்கள் தரும் பரிசு , அதை தவிர வேறு எந்த பரிசும் தேவையில்லை என அச்சிட்டுள்ளார். 68 வயதான சுபாஷ் ராவ் ஓய்வுபெற்ற மின்வாரிய ஒப்பந்தகாரர் ஆவார். வரும் 21ம் தேதி நடக்கவுள்ள தனது மகன் திருமணத்துக்கு இவ்வாறு ஒரு திருமண பத்திரிகையை அச்சிட்டுள்ளார். 

இது குறித்து பேசிய அவர் நான் மட்டுமல்ல எனது மகனும் பிரதமர் மோடியின் ஆதரவாளர் தான். அதனால் தான் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்ற வாசகத்துடன் பத்திரிகை அச்சிட விரும்பினோம்.  எனக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மீதும் அதீத அன்பு உண்டு. சுமார் 1000 பத்திரிகை அச்சிட்டு உறவினர்கள் நண்பர்களும் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார். இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.