ஹைதராபாத்தில் ஆம்புலன்ஸில் சரியான நேரத்தில் கதவு திறக்காததால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹைதராபாத்தின் ஜில்லேலாகுடா பகுதியை சேர்ந்தவர் செக்காலா ஆனந்த்(54). இவர் தினமும் பணி முடிந்து உள்ளூர் ரயிலில் தனது வீட்டிற்கு திரும்பி செல்லுவார். இந்நிலையில் நேற்று இரவும் அதே மாதிரி தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
(உயிரிழந்த ஆனந்த்)
இதனையடுத்து உடன் பயணித்த சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ் அழைப்பு விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரயில் மாலாக்பெட் ரயில்நிலையத்தை அடைந்த போது ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது. எனினும் ஆனந்தை சக பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து வெளியே தூக்கி வந்தபோது அவரை ஆம்புலன்ஸ் உள்ளே ஏற்ற முடியவில்லை. ஏனென்றால், ஆம்புலன்ஸின் கதவு திறக்க முடியாமல் போனது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 15 நிமிட தீவிர போராட்டத்திற்கு பிறகு கதவை திறந்தனர்.
ஆனால், இந்த ஆம்புலன்ஸ் கதவு திறக்கும் முன்பு ஆனந்திற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவரின் உயிரும் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனந்தின் குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களின் ஆம்புலன்ஸ் சரியாக பராமரிக்க படாததே இதற்கு காரணம் என்று தெரிவித்தனர். எனவே சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தும் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.