கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதால் தன்னை பக்கத்து வீட்டுக்காரர்கள் குடியிருப்புக்குள் அனுமதிக்காமல் துன்புறுத்துவதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சக மருத்துவர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டது நாட்டிற்கே பெரிய அவமானத்தை உண்டாக்கியுள்ளது. சில இடங்களில் மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி " கொரோனா வைரஸ் எனும் தொற்று நோயை எதிர்த்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் போரிட்டு வருகின்றனர். எனவே மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை" என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர சட்டமும் இயற்றப்பட்டது.
இந்நிலையில் தன் உயிரை பணயம் வைத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் பெண் மருத்துவரை, அவரின் குடியிருப்புவாசிகள் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகார் மனுவில் "மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் தன்னை அக்கம்பக்கத்தினரும், குடியிருப்புவாசிகளும் தரக்குறைவாக பேசுகின்றனர். மேலும் என்னை வீட்டுக்கு செல்லவும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனால் என் பணிகளை முடித்துவிட்டு என்னுடைய சகோதரர் வீட்டுக்கும் செல்ல முடியவில்லை. அங்கேயும் இதே நிலைமைதான்" என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தெலங்கானா மாநில மருத்துவச் சங்கத்தினர் இச்சம்பவம் குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேந்திரிடம் புகார் அளித்துள்ளனர். அவரும் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.