இந்தியா

நீரவ் மோடி செய்ததை விட பெரியது... செருகுரி ஸ்ரீதர் செய்த ரூ.7,296 கோடி நிதி மோசடி?!

EllusamyKarthik

நீரவ் மோடி பாணியில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'டிரான்ஸ்ட்ராய் இந்தியா' நிறுவனத்தினர் ரூ.7,000 கோடிக்கு மேல் நிதி மோசடி செய்ததாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 6,000 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் தொழிலதிபர் நீரவ் மோடி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நீரவ் மோடி தவிர, அவரது மனைவி அமி மோடி, ‌மாமா மெஹுல் சோக்சி, சகோதரர் நிஷால் மோடி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், நடவடிக்கைக்கு அஞ்சி வெளிநாட்டிற்கு தப்பிவிட்ட நீரவ் மோடியை மீட்டு வரும் நடவடிக்கையாக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீரவ் மோடி மட்டும் இப்படி மோசடி புகாரில் சிக்கவில்லை; அவரது உறவினர் மெகுல் சோக்சி ரூ.7,000 கோடிக்கு மேல் வங்கி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது இவர்களை இரண்டு பேரையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இன்னொரு மோசடி புகாரில் தொழிலதிபர்கள் சிக்கியுள்ளனர். 

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'டிரான்ஸ்ட்ராய் இந்தியா' நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான செருகுரி ஸ்ரீதர், இணை இயக்குநர்கள் ராயபதி சாம்பசிவ ராவ் மற்றும் அக்கினேனி சதீஷ் ஆகியோர்தான் அவர்கள். 

சமீபத்தில் இவர்களின் நிறுவனத்தின் மீது வங்கிக் கூட்டமைப்பு புகார் கொடுத்தது. 

இந்தப் புகாரின்பேரில் ஹைதராபாத் மற்றும் குண்டூரில் உள்ள இந்த நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதை அடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்கள் அனைத்தும் கனரா வங்கி மற்றும் பிற வங்கிகளிடம் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து முறைகேடாக 7,926 கோடி ரூபாய் கடன் பெற்றதற்கான ஆதாரங்கள் எனக் கூறப்படுகிறது. இயக்குநர்கள் போலி ஆவணங்களை தாக்கல் செய்து இந்த மோசடியை செய்துள்ளனர்.

தற்போது அவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறும்போது, ``ஹைதராபாத், குண்டூர் என அந்நிறுவனத்தின் சொந்தமான பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. வழக்குப்பதிந்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தனர்.