model image meta ai
இந்தியா

தெலங்கானா | பேட்மிண்டன் விளையாடிய 25 வயது நபர்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்!

தெலங்கானாவில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், தெலங்கானாவில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

model image

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், டல்லாடாவைச் சேர்ந்தவர், முன்னாள் துணை சர்பஞ்ச் குண்ட்லா வெங்கடேஸ்வர்லு. இவரது மகன் குண்ட்லா ராகேஷ். 25 வயதான இவர், ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த ராகேஷ், திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை உடனடியாக நண்பர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். அவருடைய உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: இளம் வயதில் மாரடைப்பு..! வீட்டில் இருக்க வேண்டியவை என்ன? | heart attack