ஊரடங்கு காலங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும், கூரியர் ஊழியர்களுக்கும் இலவச உணவு வழங்க முன்வந்த 2 நிறுவனங்கள் கவனம் பெற்றுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ள நேரத்தில் பார்சல் உணவுகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானதாய் அமைந்திருக்கிறது.ஊருக்கே உணவு கொடுக்கும் இவர்களில் பெரும்பான்மையானோர் வேலை பளு காரணமாக உணவு அருந்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் இவர்களை கருத்திக் கொண்ட, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீ இந்தி போஜனம் என்ற உணவகமும், ஷ்ரீட் பைட் என்ற யூடியூப் சேனலும் இணைந்து உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் கூரியர் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் கடந்த மே 10-ஆம் தேதி தொடங்கி உணவு வழங்கி வருகின்றனர். தினமும் 40 உணவு பொட்டலங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில் குடிநீர் பாட்டிலுடன் பிரியாணி, ப்ரைடு ரைஸ் உள்ளிட்ட உணவுகளும் இடம்பெறுகிறது.
இது குறித்து ஸ்ரீ இந்தி போஜனம் இணை கூட்டாளர் தேவி ரெட்டி ஸ்ரீ கிருஷ்ண பிரசாத் கூறும்போது, “ ஊரடங்கு முடியும் வரை உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்க எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஐடியாவை எங்களிடம் முன்வைத்தது ஷ்ரீட் பைட் ரவிதேஜ் ரவுரி தான்” என்றார்.
இது குறித்து ரவிதேஜ் ரவுரி கூறும் போது, “ பெரும்பான்மையான நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலைப்பளு
காரணமாக பசியோடு பணியாற்றுகின்றனர். ஆகையால்தான் நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுக்க முன்வந்தோம்”என்றார்.