இருசக்கரவாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் தனியார் பேருந்து ஏறியதில் உயிரிழந்த சம்பவம் ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.
ஐதராபாத்தில் ரயில்வே பணித்தேர்வினை எழுதுவதற்காக 23 வயதான காவ்யா என்ற இளம்பெண் தனது சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காலை 7.30 மணி அளவில் நலகொண்டா சாலையில் சென்று கொண்டிருந்தபோது, தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த சிறு பள்ளத்தில் சறுக்கி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது.
எதிர்பாராத விதமாக காவ்யாவும் அவரது சகோதரரும் சாலையில் விழுந்தனர். அப்போது அருகில் சென்ற தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதால் காவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சகோதரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து நிகழ்ந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. அத்துடன் சாலையோரம் ஒரு ரிக்ஷா நின்றுகொண்டிருந்ததும் விபத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.
தனது மகள் உயிரிழப்புக்கு காரணம் சாலை முறையாக பராமரிக்கப்படாதது தான் எனவும், அதுதொடர்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவ்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பேருந்து ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தேர்வெழுத சென்ற இளம்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.