சிவசங்கரைய்யா pt web
இந்தியா

உயிரோடு இருந்த மனைவிக்கு இறப்புச் சான்றிதழ்.. கான்ஸ்டபிள் செய்த செயலால் அதிர்ச்சி!

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது மனைவி மாதவி இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் ஒன்றை தயார் செய்துள்ளார் கான்ஸ்டபிள் சிவசங்கரைய்யா.

PT WEB

பிரிந்து வாழும் மனைவி இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை பெற்று மனைவி பெயரில் இருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சகோதரி பெயருக்கு மாற்றி விற்பனை செய்ய முயற்சி செய்து, தில்லு முல்லு வேலையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில மங்களகிரி சிறப்பு அதிரடிபடை போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் சிவசங்கரய்யா. அவருக்கும் மாதவி என்ற பெண்ணுக்கும் 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தபோது மனைவி பெயரில் நான்கு சென்ட் நிலம் வாங்கி கொடுத்திருந்தார் சங்கரய்யா. தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவிக்கு தான் வாங்கி கொடுத்த நிலம் மட்டும் சொந்தமாக இருப்பது சங்கரய்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே மனைவியிடம் இருந்து நிலத்தை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளில் சங்கரய்யா ஈடுபட்டார்.

இரண்டு மகன்கள் வாரிசுகளாக இருப்பதால் நிலத்தை திருப்பி கொடுக்க இயலாது என்று மாதவி கூறிவிட்டார். எனவே எப்படியாவது அந்த நிலத்தை கைப்பற்ற முடிவு செய்த சங்கரய்யா, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது மனைவி மாதவி இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் ஒன்றை தயார் செய்துள்ளார். அதன் மூலம் மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்களுக்கு வாரிசு தான் என்பதற்கு உரிய ஆவணத்தையும் வருவாய் துறையில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

அவற்றை ஆதாரமாக வைத்து கடந்த ஆண்டு மனைவி பெயரில் இருந்த நிலத்தை தன்னுடைய சகோதரி ஆதிலட்சுமி பெயருக்கு மாற்றம் செய்தார். பின்னர் அந்த நிலத்தை 40 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய பேரம் பேசி வந்தார். இது பற்றி தகவல் அறிந்த மாதவி அளித்த புகாரின் பேரில் வழக்கப் பதிவு செய்த நந்தியாலா போலீசார் போலீஸ் காண்ஸ்டபிள் சங்கரய்யா மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.