ராஜஸ்தான்
ராஜஸ்தான் pt web
இந்தியா

மனைவியை துன்புறுத்தி ஆடைகளின்றி தெருவில் இழுத்துச் சென்ற கணவர்.. ராஜஸ்தானில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

Angeshwar G

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதேபோல், தற்போது 21 வயதே ஆன இளம்பெண் ஒருவரை அவரது கணவரே துன்புறுத்தி நிர்வாணப்படுத்தி கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

தனது மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த காட்டுமிராண்டித் தனமாக கொடூரத்தை அந்த நபர் நிகழ்த்தியிருக்கிறார். இதற்கு கணவரின் தாயும், தந்தையும் உடந்தையாக இருந்தனர். ஓராண்டுக்கு முன் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், பிரச்னை ஏற்பட்டு பிரிந்து சென்ற அந்த பெண் வேறொரு நபருடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ப்ரடாப் கார்க் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவரை ஆடைகள் களையப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. குற்றப்பிரிவு ஏடிஜிபியை சம்பவ இடத்திற்கு அனுப்பி இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாகரீகமான சமுதாயத்தில் இது போன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் தங்களது கண்டங்களை பதிவு செய்துள்ளது. பாஜக எம்.பி. ஷெகாவத், இச்சம்பவத்தில் ராகுல்காந்தி, அசோக் கெலாட்டை ராஜினாமா செய்ய சொல்வாரா என்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலத்தில் அமல்படுத்தச் சொல்வாரா என்றும் காங்கிரஸ் பாசாங்குத் தனத்தை இந்த சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜேபி நட்டா கூறுகையில், பெண்களுக்கான பாதுகாப்பு மாநிலத்தில் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது. முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் கோஷ்டி பூசலை தீர்ப்பதிலேயே மும்முரமாக உள்ளனர் என்றும் ராஜஸ்தான் மக்கள் மாநில அரசுக்கு இது குறித்து தகுந்த பாடம் கற்பிப்பார்கள் ன்றும் தெரிவித்துள்ளார்.