மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பெங்களூரு நகரில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ), கர்நாடக ஜனசக்தி, ஆம் ஆத்மி கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சில மாணவர் அமைப்பினரும் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘நானும் கவுரிதான்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க, மாநில அரசால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.