இந்தியா

அறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்

webteam

பாலிவுட் நடிகர் சோனு சூட் கோரக்பூரைச் சேர்ந்த  22 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சோனு சூட் ஊரடங்கு ஆரம்பமான காலத்தில் இருந்தே, வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவி செய்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் கூட ஒரு குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது அவர் கோரக்பூரைச் சேர்ந்த 22 வயது பெண்மணியான தேவ வந்திதா என்பவரின் முழங்கால் அறுவைச் சிகிச்சைக்கு தேவையான 1.20 லட்சம் பணத்தை வழங்கி உதவி செய்துள்ளார்.

பிரக்யா மிஸ்ரா எனற பெயரில் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் தேவ வந்திதா கடந்த வாரம் சோனு சூட்டிடம் உதவிக் கோரும் நோக்கில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் “ ஐயா எனக்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது. உங்களிடம் உதவிக்காக நான் பல முறை கோரிக்கை வைத்திருக்கிறேன். நான் படுக்கையில் இருந்து மீள பண உதவி செய்யுங்கள் என்று கூறி, முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவமனையில் இருந்து கொடுத்த மருந்துச்சீட்டை அதில் இணைத்திருந்தார். அதில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, மருத்துவமனையில் இருந்து 1.20 லட்சம் கோரப்பட்டது குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது ட்விட்டைப் பார்த்த சோனு சூட் உத்தரபிரதேசம் இந்திராபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டு, தேவ வந்திதாவின் அறுவைச் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தது மட்டுமன்றி, அவர்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சோனு சூட் “ நான் மருத்துவரிடம் பேசி விட்டேன். உங்கள் அறுவைச் சிகிச்சை அடுத்த வாரம் நடைபெறும். விரைவில் குணமாகுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தேவ வந்திதாவை கவனித்து வரும் மருத்துவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது ” சோனு சூட் தேவ வந்திதாவை சந்தித்தப் பின்னர், அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் தொடர்ச்சியாக தேவ வந்திதாவின் உடல் நிலை குறித்தும் அவரது குடும்ப பின்னணி குறித்தும் என்னிடம் கேட்டறிந்தார். என்றார்

கோயிலில் பாதிரியாரக பணியாற்றும் தே வவந்திதாவின் தந்தைக் கூறும் போது “ அவர் எனது மகளின் அறுவை சிகிச்சை மட்டுமல்லாது நாங்கள் ஊர் திரும்புவதற்கும் தேவையான உதவியையும் செய்துள்ளார்.” என்று கூறினார்.