இந்தியா

“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா

webteam

ஓலா, ஊபரை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எவ்வாறு பாதிப்படையும் என்று முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “வாகனங்களை வாங்க வேண்டும் என்பதை விட ஓலா, ஊபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என்ற மக்களின் மனப்போக்கே ஆட்டோமொபைல் துறை சரிவை சந்திக்க காரணம்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அமைச்சர்கள் சிலர் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் இந்தக் கருத்துகள் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லாது. இது அரசின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. 

ஓலா, ஊபர் ஆகியவற்றை பயன்படுத்துவதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் டிரக்குகளின் விற்பனை ஏவ்வாறு குறையும்? அத்துடன் துபாயை போல் இந்தியாவிலும் ஷாப்பிங் திருவிழா நடைபெறும் என்று நேற்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்திய பொருளாதாரமும் ஐக்கிய அமீரகத்தின் பொருளாதாரமும் வித்தியாசமானவை. இந்தியாவில் விவசாயிகள் முன்னேறினால் மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 

இந்திய பொருளாதாரம் 8 சதவிகிதம் வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டின் முதல் காலண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதம் மட்டுமே வளர்ந்துள்ளது. இதனால் ரூ 6 லட்சம் கோடி அளவிலான தொகையை நாம் இழந்திருக்கிறோம். மேலும் வங்கிகளை இணைப்பதால் மட்டும் வாராக்கடன்களின் எண்ணிக்கை குறையாது” எனத் தெரிவித்துள்ளார்.