பீகார் 2025 தேர்தலில், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, பாஜகவுடன் இணைந்து, 22 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது, 2020 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட சிராக், இம்முறை கூட்டணியில் இணைந்து வாக்குகளை ஒருங்கிணைத்ததின் விளைவாகும். பட்டியல் சமூக வாக்குகளை பெருமளவில் குவித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை சிராக் பெற்றுத்தந்துள்ளார்.
2025 பீகார் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – தன்னுடைய எதிரணிகளுக்கு இணையாகக் கலக்கமாகப் பார்க்கக் கூடிய கட்சி லோக் ஜனசக்தி. ஏனெனில் கடந்த 2020 பிகார் சட்டமன்ற தேர்தலின்போது, தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்து களம்கண்டார் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான். அந்தத் தேர்தலில் மொத்தமாக 135 தொகுதிகளில் போட்டியிட்டார். 1 தொகுதியில்தான் லோக் ஜனசக்தியால் வெற்றி பெற முடிந்தது என்றாலும், 28 தொகுதிகளில் நிதிஷ்க்கான வெற்றியைப் பறித்தது சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி. அது மகாகத்பந்தனுக்கு மிகப்பெரிய பலமாக மாறிவிட்டது.
லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் போன்றே பீகாருடைய நம்பிக்கைக்குரிய சோஷலிஸ முகங்களில் ஒன்றாக உதித்த ராம் விலாஸ் பாஸ்வான் தொடங்கிய கட்சி இது. தொடக்கத்தில் இணைந்து செயல்பட்ட பாஸ்வான் பிற்பாடு தனக்கென்று தனிப் பாதையை அமைத்துக்கொண்டார்.
பீகாரில் ஒவ்வொரு தரப்புக்கும் பிரத்யேக வாக்கு வங்கி இருக்கும்போது ராம் விலாஸ் பஸ்வானும் தனக்கென்ற ஒரு வாக்குவங்கியை உருவாக்கினார். குறிப்பாக, பட்டியல் சமூக மக்கள் மத்தியில் பிரத்யேகமாக தனக்கான வாக்கு வங்கியை உருவாக்கினார்.
2005இல் பீகார் இரு தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முன்னதாக 2005 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காத சூழல். அந்தச் சமயத்தில் 29 இடங்களை வென்றிருந்தது பாஸ்வானின் கட்சி. லாலு, நிதிஷ் இருவருக்குமே தன்னுடைய ஆதரவு கிடையாது; மாறாக முஸ்லிம் ஒருவர் முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டால் அவருக்கு ஆதரவு தருவேன் என்று சொன்னார் பாஸ்வான். பீகாரில் அதுவரை லாலு கட்சியே ஆட்சியில் இருந்தது. ஆட்சிக்குப் பக்கத்தில் அப்போதுதான் நிதிஷ் வந்திருந்தார். பாஸ்வான் ஆதரவு தராத சூழலில், அவருடைய எம்.எல்.ஏ.க்களில் 22 பேரை தன் பக்கம் இழுத்தார் நிதிஷ். அப்படியும் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, ஆட்சி அமைக்க முடியாமல் போனது என்றாலும், அடுத்து 2005 அக்டோபரில் நடந்த தேர்தலில் பாஸ்வானிடமிருந்து நிதிஷ் பக்கம் வந்தவர்களில் பெரும்பான்மையினர் நிதிஷ் கட்சியில் நின்று வென்றார்கள்.
நிதிஷ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. எதிரே பாஸ்வானின் கட்சி 10 இடங்களுடன் முடங்கியது. இந்த துரோகத்தால் பாஸ்வான் பெரும் மனவுளைச்சலுக்கு உள்ளானார்.
நிதிஷ் முதல்வரானதும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைக் காட்டிலும் கீழே இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சிறப்பு கவனம் அளித்து, தன்னுடைய ஆதரவு தளமாக அவர்களை மாற்றிக்கொண்டாரோ அப்படி தலித் வரையறைக்குள் இருந்த 22 சாதிகளில் 18 சாதிகளை மட்டும் பிரித்து மகா தலித் எனும் ஒரு பிரிவை உருவாக்கி, அவர்களுக்கு சிறப்புக் கவனமும், சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தினார். தலித் வட்டத்துக்குள் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் பாஸ்வான் சமூகம் உள்ளிட்ட 4 சமூகங்கள் மகா தலித் வட்டத்துக்குள் கொண்டுவரப்படவில்லை.
பிற்பாடு 10 ஆண்டுகள் கழித்து எல்லா சமூகங்களையும் ஒரே வட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்டாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் ராம்விலாஸ் பாஸ்வானுடைய ஆதரவுத் தளத்தை நிதிஷின் இந்நடவடிக்கை சுருக்கிவிட்டது. இது பாஸ்வானுக்கு நிதிஷ் கொடுத்த ஆறாத ரணம் ஆனது. இத்தகு சூழலில், இடையிடையே லாலுவுடன் இணைந்து கூட்டணி கண்டார் பாஸ்வான். இது, நிதிஷுக்கு பாஸ்வான் மீதான பகையானது. எப்படியும் 2020இல் பாஸ்வான் மறையும் வரை நிதிஷும் பாஸ்வானும் தங்களுடைய மனக்கசப்பிலிருந்து வெளியே வரவே இல்லை. இந்தப் பின்னணியில் லோக் ஜனசக்தியின் அடுத்த தலைவராக பதவியேற்றுக்கொண்ட பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கு நிதிஷ் மீது ஆழமான கசப்பு இருந்தது.
பாஜக எதிர்ப்பை மிகப்பெரிய அளவில் கைகொண்டவர் ராம் விலாஸ். ஆனால், அந்தக் கட்சி 2014 ஆம் ஆண்டு மக்களவைத் பாஜகவுடனே கூட்டணி வைத்தது. அப்போது சிராக் பஸ்வானை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டுமென்பதற்காகவே இத்தகைய முடிவு என அப்போது பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பஸ்வான் 2020 ஆண்டு மறைந்ததற்குப் பின் லோக் ஜனசக்தி கட்சி உடைந்தது. அவரது சகோதரர் பசுபதி குமார் பராஸ் தனித்த கட்சி தொடங்கினார். பராஸ் லோக் ஜனசக்திக்கு இருந்த 6 எம்பிக்களில் 5 எம்பிக்களை தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால், பாஜக சிராக் தலைமையிலான லோக் ஜனசக்தியைத்தான் விரும்பியது. விரும்புகிறது. அவரை ஆதரித்து தன்னுடன் தன் கூட்டணியில் வைத்துக்கொண்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், 243 இடங்களில் 133 தொகுதிகளில் போட்டியிட்டது சிராக்கின் லோக் ஜனசக்தி கட்சி. அது ஏன் மிச்சம் 110 தொகுதிகளில் போட்டியிடவில்லை என்றால், அங்கெல்லாம் பாஜக களத்தில் இருந்தது. அதாவது நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் பாஜக 110 தொகுதிகளிலும் ஏனைய கூட்டணி கட்சிகள் 43 தொகுதிகளிலும் போட்டியிட்ட சூழலில், பாஜக போட்டியிடும் 110 தொகுதிகளில் மட்டும் மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் சிராக். 2020 தேர்தலில் ஒரேயொரு இடத்தில்தான் அவருடைய லோக்ஜனசக்தி வென்றது என்றாலும், மாநிலம் தழுவி 5.66% வாக்குகளை குவித்தது. கூடவே கிட்டத்தட்ட 34 தொகுதிகளில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் தோல்விக்கு வழிவகுக்கும் வகையில் ஓட்டைப் பிரித்தது. இதன் விளைவாகத்தான் 2024 தேர்தலில் சிராக் பாஸ்வானை மீண்டும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவந்தது பாஜக.
லோக் ஜனசக்திக்கான பிரத்யேக வாக்கு வங்கி என்பது பட்டியல் சமூக மக்கள்தான். ஆனால், நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் பட்டியல் சமூக மக்களை பெரிய அளவில் நம்பியிருக்கிறது. எனவே, இந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என பாஜக தேசிய தலைமைக்கு நிதிஷ் அழுத்தம் கொடுத்தார். ஆனாலும் 29 தொகுதிகளை லோக் ஜன சக்திக்கு ஒதுக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அந்தத் தொகுதிகளில் பெரும்பாலானவை கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்ற தொகுதிகள். அப்படியிருந்தும் தைரியமாகக் களம் கண்டார் சிராக். தற்போதோ பிற்பகல் 2 மணி நிலவரப்படி 22 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறார் சிராக். கிட்டத்தட்ட மிகப்பெரிய வெற்றி இது.
இது எப்படி நிகழ்ந்தது என்பது முக்கியமான விஷயம். கடந்த தேர்தலில் சிராக் தனித்துப் போட்டியிட்டார். அதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் பாஜகவிற்கும் இடையில் வாக்குப் பரிமாற்றம் என்பது சரியாக நிகழவில்லை. ஐக்கிய ஜனதா தளத்தை ஆதரிக்கும் வாக்காளர்களில் ஏறத்தாழ 75% மக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், பாஜக ஆதரவாளர்கள் ஏறத்தாழ 50% மட்டுமே நிதிஷ்க்கு வாக்களித்தனர். எஞ்சிய 20 % வாக்காளர்கள் சிராக் பஸ்வானை தேர்ந்தெடுத்தனர் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இம்முறை அப்படி நிகழவில்லை. மூவரும் ஒரே கூட்டணியில் இருப்பதால் வாக்குகள் சிந்தாமல் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வரும்படி வேலை செய்தனர்.
அதைத்தாண்டி மிக முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பு முடிவுகள் மாநிலத்தில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் 20% இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்தது. அதோடு மாநிலத்தில் சிராக் பஸ்வானைத் தாண்டி மிகப்பெரிய அளவில் பட்டியல் சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய தலைவர்கள் இல்லை. எனவே, அந்த 20% வாக்குகளில் பெருமளவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கொண்டு வந்திருக்கிறார் சிராக். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் சிராக்.
2020 சட்டமன்ற தேர்தலில் வாக்குவங்கியாக பார்த்தால் என்.டி.ஏ கூட்டணிக்கும், மகாகட்பந்தன் கூட்டணிக்கும் ஒரே அளவுதான். இருதரப்பினரும் தலா 37 சதவீதம் வாக்குகளையே பெற்றனர். என்.டி.ஏவில் பாஜகவுக்கு 19.46, ஜேடியு-க்கு 15.39 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. ஆர்.ஜே.டி-க்கு 23.11, காங்கிரஸ்-க்கு 9.48 வாக்குகள் கிடத்தன. இத்தகைய சூழலில்தான் கடந்த தேர்தலில் 5.66 சதவீதம் வாக்குகளை வைத்திருந்த லோக் ஜனசக்தி கட்சியானது என்.டி.ஏவில் சேர்ந்தது அதன் வாக்குவங்கியை அப்படியே உயர்த்திவிட்டது. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் பெரிய அளவில் பாசிடிவ் ஆக அமைந்துவிட்டது.