Parliament web
இந்தியா

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை.. பாஜகவுக்கு இன்னும் எத்தனை எம்பிக்கள் தேவை?

நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்க இன்னும் எத்தனை எம்பிக்கள் தேவை?... திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா உத்தவ் பிரிவில் ஏற்பட்ட பிளவுகள், ஆளும் கூட்டணிக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும்?... விரிவாக பார்க்கலாம்.

PT WEB

மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, பெண்கள் இடஒதுக்கீடு போன்ற அரசமைப்பு திருத்தங்களை நிறைவேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. தற்போது 318–319 எம்பிக்கள் ஆதரவு உள்ள நிலையில், 360 என்ற இலக்கை அடைய இன்னும் 41 எம்பிக்கள் அவசியம். கடந்த திருத்த மசோதா வாக்கெடுப்பில் 352 வாக்குகளை எட்ட முடியாத அனுபவம் பின்னணியாக உள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மீண்டும் முயற்சிக்கலாம் என தெரிகிறது. ஆனால் அரசமைப்பு திருத்தத்தை உடனடியாக அமல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. அதுதொடர்பான மசோதா, 3இல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

Parliament

அதாவது இந்த மசோதாவுக்கு 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் குறைந்தது 273 எம்பிக்களின் ஆதரவு தேவை. அவைக்கு வந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கட்டாயம். தற்போதைய மக்களவையின் 540 எம்பிக்களும் அவைக்கு வந்து வாக்களித்தால், குறைந்தது 360 பேரின் ஆதரவு தேவைப்படும். அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 131ஆவது அரசமைப்பு திருத்த மசோதா வாக்கெடுப்பின்போது, 528 பேர் பங்கேற்ற நிலையில், மூன்றில் இரண்டு பங்கு மதிப்பான 352ஐ எட்ட முடியாமல் போனது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவில் ஏற்பட்டுள்ள பிளவு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எந்த அளவில் சாதகமாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த 20 அதிருப்தி எம்பிக்கள், நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியுடன் இணைந்தனர்.

TMC split

சிவசேனா உத்தவ் பிரிவின் 9 எம்பிக்களில், 6 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 318 முதல் 319 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. ஆனால் 360 என்ற இலக்கை அடைய, இன்னும் 41 இடங்கள் அவசியம். அதேநேரம், மக்களவையில் இந்தியா கூட்டணியின் பலம் 225ஆக இருந்த நிலையில், அது தற்போது 199ஆக சரிந்துள்ளது.

மாநிலங்களவையை பொறுத்தவரை தற்போது 245 இடங்களில், 242 இடங்கள் நிரம்பியுள்ளன. பாஜகவுக்கு 114 எம்பிக்கள் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி வசம் சுமார் 140 எம்பிக்கள் உள்ளனர். என்டிஏ அல்லாத பிற கட்சிகள் 100க்கும் அதிகமான எம்பிக்களைக் கொண்டுள்ளன. மசோதா மீது, அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்தால் பெரும்பான்மைக்கு 161 வாக்குகள் அவசியம்.

Shiv sena

இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுகவின் கூட்டணியை காங்கிரஸ் முறித்ததால், திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவை பெற பாஜக முயற்சிக்கலாம். மேலும் 4 எம்பிக்களை கொண்ட YSR காங்கிரஸின் உதவியை நாடலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.