இந்தியா

உ.பி : கொரோனா விதிமுறைகளை மீறி மதகுருவின் இறுதி சடங்கில் கூடிய ஆயிரக்கணக்கானோர்

EllusamyKarthik

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அதனால் தொற்று பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில் ஞாயிறு அன்று இஸ்லாமிய மதகுருவின் இறுதி ஊர்வலத்தில் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு, மாஸ்க் ஏதும் அணியாமல் ஆயிரக்கணக்கானோர் கூடியது? எப்படி என்பது குறித்து விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழுவை போலீசார் அமைத்துள்ளனர். 

ஞாயிறு அன்று நடைபெற்ற மதகுரு அப்துல் ஹமீத் முகமது சலீமுல் காத்ரியின் இறுதி ஊர்வலத்தில் இந்த விதிமீறல் நடந்ததாக தெரிகிறது. அதன் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருந்தன. அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் அந்த மாவட்ட போலீசார். இந்திய தண்டனை சட்டப் பிரிவு 188 மற்றும் 144 விதிகளை மீறிய குற்றத்தின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. 

“இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்ட விசாரணையில் ஒரே இடத்தில் இவ்வளவு பேர் கூட தனி ஒரு நபர் காரணம் அல்ல என கண்டறிந்துள்ளோம்” என மாவட்ட போலீஸ் எஸ்.பி சங்கல்ப் ஷர்மா தெரிவித்துள்ளார். 

தற்போது இந்த மாவட்டத்தில் 2928 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதே நேரத்தில் உள்ளூரை சேர்ந்த மக்கள் அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். எப்படியும் மதகுரு அப்துல் ஹமீத் முகமது சலீமுல் காத்ரியின் இறுதி ஊர்வலத்தில் பலர் பங்கேற்பார்கள் என தெரிந்தும் அதை தடுக்க தவறிவிட்டனர் என்றும். அதனால் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.